அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாராகவும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன்.
பொதுவாக இறைவனோடு மற்றவர்களையும் அதாவது பெரியார்களையும், ஷெய்ஹு மார்களையும், பீர்களையும், அவ்லியாக்களையும், இறைநேசர்களையும் பிராத்திப்பவர்கள் பின்வரும் காரணங்களில் சிலவற்றையோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தையோ கூறுவர். அவைகள் யாவை எனில்,
- நீதிபதியிடம் வாதாடுவதற்காக ஒரு வக்கீல் தேவையல்லவா? அதுபோல் நாங்கள் அவ்லியாக்களிடம் அல்லாஹ்விடம் வாதாடுவதற்காக முறையிடுகிறோம் நாங்கள் கேட்பெதல்லாம் கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து கேட்கிறோம்
- நாங்கள் பாவங்கள் செய்த பாவிகளாக இருக்கின்றோம். அதனால் பாவமே செய்யாத இறைவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் அல்லாஹ்விடம் எங்களின் தேவைகளைக் கேட்டுப் பெற்றுத் தருவார்கள்
- நல்லடியார்கள் கேட்கும் துஆ இறைவனால் மறுக்கப்படமாட்டாது. அதனால் அவர்கள் மூலம் இறைவனிடம் கேட்கிறோம்
- மார்க்கத்தில் சிறிதளவு விபரமுள்ள இன்னும் சிலர் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம்
- நாங்கள் ஒன்றும் புதிதாக இதைச் செய்யவில்லை. எங்கள் முன்னோர்களும், மூதாதையர்களும் அவ்லியாக்களிடம் முறையிட்டுத் தானே தேவைகளைப் பெற்றுவந்தர்கள். அவர்கள் என்ன ஒன்றும் விளங்காதவர்களா?
- எங்கள் ஆலிம்களும் மற்றும் ஹஜ்ரத் மார்களும் இதைச் செய்கிறார்களே, அவர்களும் தவறு செய்கிறார்களா?
அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ் ஒருவனையே வணங்கவேண்டும் என்றும், அவன் ஒருவனிடமே உதவிதேட வேண்டும் என்றும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்க கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போர் எடுத்து வைக்கும் மேற்கூறப்பட்ட வாதங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஆராய்வோம்.
1) இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?
இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், நாம் நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையில்லையா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அது போலத்தான் நாங்களும் இறைவனிடம் வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம் என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது இஸ்லாத்தை பற்றி அவர்கள் ஓரளவுக்கு கூட அறியாமல் இருப்பதே காரணம் ஆகும். நீதிபதி நாம் குற்றம் செய்தவாகளா அல்லது நிரபராதியா என்பதை நமக்காக வாதாடும் வக்கீல் எடுத்து வைக்கும் சாட்சியங்களை வைத்தே அறிந்து கொள்வார். அதுவும் சாட்சியங்கள் சரிவர நிருபிக்கப்படாவிட்டால் நிரபராதிக்குக் கூட தண்டணையளிக்கும் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள்.
இது இப்படியிருக்க அகிலங்களையெல்லாம் படைத்து பரிவக்குவப்படுத்தி பாதுகாத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு நமது தேவைகள் என்ன என்பது தெரியாதா? இதயங்களில் உள்ள இரகசியங்களை அறிபவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று தன்னுடைய திருமறையிலே பல இடங்களில் இறைவன் கூறுகின்றானே!!!
“வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும், பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்”(அல்குர்ஆன் 64:4)
இன்னும் பல வசனங்களில் 11:5, 67:13, 28:69, 2:284 அல்லாஹ் மட்டுமே இதயங்களிலுள்ள இரகசியங்களை அறிகிறான் என்றும் மற்ற யாரும் அவற்றை அறிய முடியாது என்றும் கூறுகின்றானே!. நாம் கூறாமலே நமது தேவைகளை அறிந்திருக்கும் இறைவனுக்கு, கேவலம் மனிதர்களிலுள்ள ஒரு வக்கீலோ அல்லது அதிகாயோ எடுத்துச் சொன்னால் தவிர அறிந்துக் கொள்ள முடியாமல் இருக்கின்ற நீதிபதியையும், அமைச்சரையும் நாம் எப்படி உதாரணங்களாக கூறமுடியும்?. இது இறைவனின் கண்ணியத்தைக் குறைவாக கருதுவதாகாதா? இறைவனுக்கு நீதிபதியையும், அமைச்சரையும் உதாரணங்களாக கூறி அல்லாஹ்விற்கு உவமைகளை ஏற்படுத்தி இணைவைத்த மாபாதகம் ஆகாதா? இவ்வாறு இறைவனுக்கு உதாரணங்களைக் கூறுபவர்களை அல்லாஹ் கடுமையான எச்சரிக்கின்றான்:
“ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்குர்ஆன் 16:74)
ஆகவே அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறுவது இந்த திருமறை வசனத்தை மீறிய மாபெரும் குற்றமாகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே. அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ்வையே அழையுங்கள் என்றும், அவன் பிரார்த்தனை புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கிறான் என்றும் ஆனால் உங்களால் அழைக்கப்படுபவர்களால் பதிலளிக்க முடியாது என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான்.
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல் குர்ஆன் 7:194)
2) நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது:-
இதுவும் அறியாமையினால் கூறப்படும் அர்த்தமற்ற வாதமாகும். நாம் பிற சமுதாயத்து மக்களிடம் அவர்கள் குல தெய்வம் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தெய்வத்தை வழிபடுவதைக் காணலாம். அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், எங்கள் குலதெய்வம் சக்திவாய்ந்தது, அது நாங்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கிறது. அதனால் தான் நாங்கள் அதை தொடர்ந்து வழிபடுகிறோம் எனக் கூறுவர். இன்னும் சிலர் அத்தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக அத்தெய்வங்களின் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கைகளைச் செலுத்துவர். அவர்கள் கூறுவது போன்று அவர்கள் வேண்டிக்கொண்டவைகளில் சில நடைபெறுவதால் தான் அவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். இதைப் போலவே நமது சமுதாயத்து மக்களில் சிலர் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப பிடித்தமான அவ்லியாக்களை எடுத்துக் கொண்டு அவர்களை தங்களின் குல அவ்லியாகவாக? ஆக்கி வைத்துக் கொள்கின்றனர். பிற சமுதாயத்தவர்கள் கூறுவதைப் போல இந்த அவ்லியாக்களும் எங்களின் தேவைகளை எல்லாம் நிறைவேற்றித் தருகின்றனர் எனக் கூறுகின்றனர். நிச்சயமாக இவைகள் எல்லாம் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகளாகும். அந்த அவ்லியாக்களிடம் நர்ச்சை செய்தால் நிறைவேறுவது போல பிற சமுதயத்து வழிபாட்டுத்தலங்கிலும் நோச்சை செய்தாலும் தான் அவர்களுக்கு சில நாட்டங்கள் நிறை வேறுகின்றன. அதற்காக அங்கேயும் செல்வார்களா?
ஒவ்வொரு காரியமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என அல்லாஹ் கூறுகிறான். நமக்கு நடக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்று நாம் நம்பிக்கை கொள்வோமேயானால் இணைவைக்கும் இது போன்ற செயல்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவான்.
3) வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே:-
நாங்கள் பாவங்கள் பல செய்த பாவிகள், ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத்தருவார்கள் எனக்கூறுகின்றனர் கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் முஸ்லிம்களில் சிலர். இதுவும் இஸ்லாத்தின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளாதவர்களின் வாதமாகும். நாம் பாவங்கள் நிறைய செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்று ஒவ்வொரு செயலின் துவக்கத்திலும் கூறிடும் நாம் அதன் பொருளை புரிந்துக் கொள்வதில்லை. அல்லாஹ் மிகப்பெரும் கருணையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான் என்று திருமறையின் பல இடங்களில் கூறுகின்றான்.
அல்லாஹ் கூறுகிறான்:-
‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)
மேற்கண்ட வசனத்தில், ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பினும், அவர் அல்லாஹ்வுக்கே முற்றிலும் வழிபட்டு தம் பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பதாகக் கூறுகின்றான். ஆனால் பாவம் செய்தவருடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று கூறுவது மேற்கண்ட வசனத்தை நிராகரித்தல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதாகளே!
4) நல்லடியார்களின் பிரார்த்தனை இறைவனால் மறுக்கப்படாது. அதனால் அவர்கள் மூலமாகக் கேட்கிறோம்:-
இது கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் இன்னும் சிலரின் வாதமாகும். முதலில் நாம் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் இறைவனின் விருப்பம். அதில் இறைவனை கட்டாயப்படுத்த யாராலும் முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கே அவர்கள் விரும்பியது சில நேரங்களில் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை எப்படியாயினும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தாகள். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறொன்றாக இருந்ததால் இறுதி வரை நபி (ஸல்) அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றித்தரவில்லை என்று வரலாறுகளில் படித்திருக்கின்றோம். இது ஒருபுறம் இருக்க அமல் செய்ய யாரால் முடியும் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருக்கும் வரையில் தான் அவரால் பார்க்கவும், கேட்கவும், அமல் செய்யவும் முடியும். அவர் இறந்து விட்டால் அவரால் எந்த ஒரு அமலையும் செய்யமுடியாது. அவருக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. இதை திருமறை வசனங்களும், ஹதீதுகளும் உறுதி செய்கின்றன. எனவே அமல்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை நமக்காக இறைவனிடம் என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் செய்கின்றார்கள் என்றால் அது பின்வரும் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முற்றிலும் எதிரான கருத்தாகும்.
அவர்கள் இறந்தவாகளே உயிருள்ளவர்கள் அல்லர் என்று அல்லாஹ் கூறுகின்றான்:-
“அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர் ; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்” (அல் குர்ஆன் 16:20-21)
தொடரும் ....
இன்ஷா அல்லாஹ்...
உங்கள் சகோதரி ஆயிஷா பானு.
