21 December 2010

பாவமன்னிப்பு {தவ்பா}

அல்லாஹ்வுடைய அடியார்களே சகோதர்களே !சகோதரிகளே !

அஸ்ஸலாமு அலைக்கு {வரஹ்}

நாமெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தொழுகின்ற தொழுகைகள்,நோன்பு,
ஜகாத்,ஹஜ் முதலான இபாதத்களின் ஒருமித்த நோக்கம் என்னவென்றால்
பாவமன்னிப்பு தேடுவதும் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவதுமாகும்.
நமது இபாதத்களின் வார்த்தைகளை கவனித்து பார்த்தால் இவை நன்றாக
புரியும்.நமது சிறிய பெரிய பாவங்கள் மன்னிக்கப்படவும் தெரிந்தோ தெரியாமலோ செய்கின்ற குற்றங்குறைகளை அல்லாஹ் மன்னித்து விடவும் கேட்கக்கூடிய தவ்பா எனும் பாவமன்னிப்பு தான் நமது இபாதத்களில்   அடங்கி உள்ளது.

உதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி என்னவென்று சொல்லும்போது அன்று பிறந்த பாலகனைப் போல தூயமையாகித் திரும்புவதாக நபி [ஸல்]அவர்கள் கூறுகிறார்கள்.

பாவமன்னிப்பு என்பது ஒரு முஹ்மீனைப் பொறுத்தவரை மிகமிக முக்கியமான தேவையாக இருக்கிறது.நல்லடியார்கள்,நபிமார்கள் எல்லாம் அதிகமாக பாவமன்னிப்பு தேடி இருக்கிறார்கள்.நபி [ஸல்} அவர்கள் இரவெல்லாம் நின்று இபாதத் செய்கிறார்கள்.கால்களெல்லாம் வீங்குமளவுக்கு நின்று வணக்குகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதரே!உங்களின் முன் பின் பாவங்களை  மன்னித்துவிட்டதாக    அல்லாஹ் வாக்களித்துள்ள பிறகும் இவ்வளவு கடினமான வணக்க வழிபாடுகளில் தாங்கள் ஈடு பட வேண்டுமா என்று ஆயிஷா{ரலி}கேட்ட போது, "ஆயிஷாவே "நான் அல்லாஹ்வுக்கு நன்றயுள்ள அடியானாக ஆக வேண்டாமா என்று நபி{ஸல்}
பதிலளித்தார்கள்.

அல்லாஹுதஆலா  தனது அருள்மறை குர்ஆனில் முஹ்மீன்களின்  முக்கிய பண்புகளைப்பற்றி குறிப்பிடும்போது அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று கூறுகிறான்.

மூச்சிறைக்க பாய்ந்து ஓடுகின்ற குதிரைகளை உதாரணம் சொல்லி
தனது உரிமையாளன் விரல் அசைத்ததும் பாய்ந்து சென்று எதிரிகளின் கூட்டத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தும் குதிரைகளின் நன்றயுள்ள பண்பை ஒப்பிட்டு, மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான் என்று கூறுகிறான.

மனிதர்கள் தமக்களித்த ஆற்றலையும், திறமையையும்,ஆயுளையும்  தவறான காரியங்களின் பக்கம் அளித்து வருகிறார்கள்.

நாளை மறுமையில் நமது உறுப்புகள் அனைத்தும் சாட்சி சொல்லும் .நாம் 
மனதிற்குள் மறைத்து வைத்த இரகசியங்களும் வெளிப்படுத்தப்படும்.

அந்நாளின் கடுமையை சிந்தித்து, நம் படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி   உள்ள அடியார்களாகவும்,அவனிடம் பாவமன்னிப்பு தேடக்கூடிய 
பண்பாளர்களாகவும்  வாழ்வோமாக!


18 December 2010

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும்.....

                                                                
                                                               
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ்]

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் நம்பிக்கை என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று  பிரார்த்தனை  செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப்பட்டிருப்போம்.

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என் பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து நான் சேகரித்ததுண்டு.

இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான்.

டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் (Dr. Lawrence Brown), கனடியன் தாவாஹ் அசோசியேசனின் (Canadian Dawah Association) interfaith துறையின் தலைவர். அமெரிக்க விமானப்படையில் மதிப்புமிக்க கண் மருத்துவராக பணியாற்றியவர். 

1990 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. அது தான் இவர் இறை நம்பிக்கையின்பால் வந்த நேரம். 

"அது 1990 ஆம் ஆண்டு. நான் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழக மருத்துவமனையில் பணியாற்றிய நேரம். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி என்னுடைய இரண்டாவது மகள் பிறந்தாள்.
 

மார்பிலிருந்து பாதங்கள் வரை அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த அவளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இதய குழாய்களில் இருந்த பிரச்சனையால் அவளுடைய உடம்பால் தேவையான இரத்தத்தை பெற முடியவில்லை. ஒரு மருத்துவராக அவள் அதிக நாட்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தேன். மிகவும் உடைந்து போனேன். இப்போது அவளுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை.

குழந்தைகள் இதய சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார். என் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு வெளியேறினேன்.

இப்போது எனக்கு துணை யாருமில்லை, என்னுடைய பயத்தை தவிர. அது என்னை அந்த மருத்துவமனையின் வழிபாட்டு அறைக்கு செல்லவைத்தது.

பாரம்பரியமிக்க கிருத்துவ குடும்ப பின்னணியை கொண்ட நான், இறைவனை குறைந்த அளவாவது அங்கீகரித்தது என்றால் அது இப்போது தான். அதுகூட சந்தேகத்தில் தான் பிரார்த்தித்தேன்.... 

"இறைவா நீ இருந்தால்..."

அவன் இருந்தால், அவன் என் குழந்தையை காப்பாற்றினால், என்னை அவனுடைய மார்க்கத்திற்கு வழி காட்டினால் நிச்சயம் அவனை நான் பின்பற்றுவேன். இதுதான் அப்போது இறைவனுக்கு நான் அளித்த வாக்குறுதி. பிறகு அவசர சிகிச்சை பிரிவிற்கு திரும்பினேன்.

என் மகள் நலமாகி விடுவாள் என்று மருத்துவர் கூறினார். அவர் சொன்னது போன்றே இரண்டு நாட்களில் அவள் சரியாகி விட்டாள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே.... இன்று அவளுக்கு பதினெட்டு வயது. நலமாக இருக்கிறாள்.

நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர். அவள் குணமானதற்கு மருத்துவ ரீதியாக patent ductus arteriosis, low oxygenation and spontaneous resolution என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக இதில் இறைவனின் பங்குள்ளது என்றே என் மனம் சொல்ல

பயத்தில் இறைவனிடம் வாக்குறுதி கொடுக்கும் பலரும், அவர்களுடைய தேவை நிறைவேறிய பின்னர் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க புது புது காரணங்களை கண்டுபிடிப்பர்.

என் மகள் குணமடைந்ததற்கு மருத்துவ காரணங்களை காட்டி என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம், நம்பிக்கை என்னுள் ஆழமாக நுழைந்து விட்டது. நாங்கள் எடுத்த cardiac ultrasounds, ஒருநாள் பிரச்சனை இருப்பதாக காட்டியதையும் மறுநாள் அந்த பிரச்சனை இல்லை என்று காட்டியதையும் என்னால் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

நான் நினைத்ததெல்லாம் இதுதான், இறைவன் நான் கேட்டதை நிறைவேற்றி விட்டான், இப்போது நான் அவனுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
                                                                                                               

12 December 2010

மஸ்ஜிதின் சிறப்பு !

அஸ்ஸலாமு  அழைக்கும்{வரஹ்}


மஸ்ஜித்!
 அணு தினமும் மனித சமுகத்தை வெற்றியின் பக்கம் நெருங்கச்செய்ய "ஹய்யாலல் பலா(ஹ்)" என்று அகிலத்தாரை அழைப்பது தான் அல்லாஹ்வின் இல்லங்கள் எனப்படும் மஸ்ஜிதுகளின் தலையாயப் பணி. மஸ்ஜித் என்பன பொதுவாக வணக்கஸ்தலமாக இருந்தாலும் ஸஜ்தா செய்யும் இடம் என்றும் அரபியில் சொல்லபடுகிறது.

மஸ்ஜித் ஒரு வரலாற்று பார்வை
உலகில் முதன்முதலில் கட்டப்பட்ட மஸ்ஜித் 'கஃபதுல்லாஹ்' எனக்குர்ஆன் சான்று பகிர்கிறது.காபா முதலில் ஆதிமனிதரும் முதல் நபியுமாகிய ஆதம் (அலை) அவர்களால் இறையோனை முறையாக வணங்கும் வழிப்பாட்டுதலமாக துவங்கப்பட்டது..,பிறகு நபி இப்ராஹீம்(அலை) அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.

அதற்கு பிறகு இரண்டாவதாக,40 வருடங்களுக்கு பின் மஸ்ஜித் அக்ஸா ஆதம் நபி அவர்களால் கட்டப்பட்டது.மூன்றாவதாக இஸ்லாமிய வரலாற்றில் பெருமானார்[ஸல்]அவர்களின் கரங்களால் கட்டப்பட்ட பள்ளி மஸ்ஜித் குபா ஆகும்.இது மதினாவிற்கு அருகில் உள்ளது.
நான்காவதாக மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவி கட்டப்பட்டது, இதற்கு நபியின் பள்ளி என்ற சிறப்பும் உண்டு.இவைகளே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிவாயில்கள் பின்பு உலகம் முழுவதும் பல்லாயிரம் மஸ்ஜிதுகள் கட்டப்பட்டன.கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மஸ்ஜித் கட்டுவதின் சிறப்பும், பயன்பாடும் 
ஒருவர் இவ்வுலகில் ஒரு மஸ்ஜித் கட்டினால் அல்லாஹ் அவருக்கு 
சுவர்க்கத்தில் மாளிகையை தருவான். (திர்மிதி, ஹாகிம்.) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுகளை கட்டுவதன் சிறப்பை இவ்வாறு கூறுகிறார்கள்

நபிகளார் காலந்தொட்டே மஸ்ஜிதுகள் கடமைக்காக தினம் சென்றும் வரும் ஒரு இடமாக மட்டும் பயன்படுத்தப்படாமல் சமுகரீதியான செயல்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டே வந்தன உதாரணமாக,மக்களை ஒன்று சேர்க்கும் மையங்களாக, சமுதாய ஒற்றுமைகளை பெரிதும் ஏற்படுத்தியும், .ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொள்ளவும், உதவிகள் செய்து கொள்ளவும்,ஒரு களமாக மஸ்ஜிதுகள் பயன்படுத்தப்பட்டன மேலும் மஸ்ஜிதுகள் தொழுகையில் ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி இஸ்லாத்தின் உயர்ந்த இலட்சியத்தை இன்றும் உலகறிய செய்கிறது.

எனவே தான் மஸ்ஜிதுகளின் முக்கியத்துவத்தை உணர்த்த நபிகள் நாயகம்[ஸல்]அவர்கள்  தனித்து தொழுவதை விட பள்ளிக்கு சென்று கூட்டாக (ஜமாத்துடன் சேர்ந்து) தொழுவதை ஊக்குவித்தார்கள் என்பதைவிட கட்டாயப்படுத்தினார்கள் என்றாலும் மிகையாகாது. தனியாக தொழுதால் ஏற்படும் நன்மையை விட பள்ளியில் ஜமாத்துடன் சேர்ந்து தொழுதால் இருபத்தைந்து மடங்கு நன்மைகள் கூடுதலாக கிடைக்கும் என்று மக்கள் மஸ்ஜிதுகளின் பால் செல்வதற்கு ஆர்வமூட்டினார்கள்.
                                  
அத்தகைய மேன்மை தங்கிய மஸ்ஜிதுக்குள் அல்லாஹ்வை தொழ அன்றாடம் செல்லும் நம்மில் பலர் பள்ளிவாயிலுக்குண்டான துவாவை சொல்ல மறப்பது வருத்தமான விஷயமே., பெருமானார் அவர்கள்
 பள்ளிக்குள் நுழையும்போது ஓதும் துஆ!  வலது காலை முனவைத்து 

அல்லாஹும்ம இப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக
  
[பொருள்]இறைவனே உன் பேரருளின் வாயிலை திறந்து வை என்றும். அதுப்போல  பள்ளியை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ!
அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க மின் வரஹ்மத்திக
[பொருள்]இறைவனே! நான் உன் அருட் கொடையையும்,கிருபையையும் 
தேடுகிறேன் என்ற சங்கைமிகுந்த துஆவையும் கற்றுக்கொடுத்தார்கள்  

இவ்விடத்தில் முஸ்ஸ்லிம்களாகிய நாம் ஒன்றை கவனத்தில் வைக்க வேண்டும்

"நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18) 
என்ற மறை சொல்லுகிணங்க அல்லாஹ் அல்லாத யாரையும் புகழவோ, பெருமைப்படுத்தவோ மஸ்ஜிதுகளை பயன்படுத்தக்ககூடாது.
மேலும் பள்ளிவாயிலுக்கு தொழ செல்லும் போது சுத்தமான ஆடைகளையே அணிந்து செல்லவும் வேண்டும் ஏனெனில்
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்;(7:31) 
என்று வல்லோன் அழகிய கட்டளையும் பிறப்பித்திருக்கிறான். 
அவன் கூறிய வழி நின்று அவனை நாளும் வணங்க அருள்புரிவானாக!
                                            

     

                                                             

19 November 2010

பெருமானார் [ஸல்] வரலாறு

                                                                       

அஸ்ஸலாமு அழைக்கும்!

நபி [ஸல்] பிறப்பு             :   20-4-570.திங்கக்கிழமை ரபீ உல் அவ்வல்
                                           மாதம் பிறை :12.

பிறந்த இடம்                    :    புனித மக்கா.

பெற்றோர்                        :  அப்துல்லாஹ்[ரலி]
                                          அன்னை ஆமினா[ரலி]

பாட்டனார்                       :   அப்துல் முத்தலிப் 

செவிலித்தாய்                  :   துவையா[ரலி] என்ற அடிமை பெண்,
                                           பின் ஹலிமா[ரலி]அவர்கள்.

பட்டப்பெயர்கள்               :   அல் அமீன்[நம்பிக்கைக்கு உரியவர்]
                                          அஸ்ஸாதிக் [உண்மையானவர்]

முதல் திருமணம்             :   அன்னை கதிஜா[ரலி]அவர்களுடன்
 
மஹர் தொகை                 :   500 திரஹம்கள்.

திருமணத்தை நடத்தி 
                   வைத்தவர்     :   அபூதாலிப் அவர்கள் 


நபி பட்டம் கிடைத்தது       :   40 வயதில் [கி.பி.610]

முதல் வஹீ                     :   இக்ர பிஸ்மி ரப்பிக என்ற வசனம்

மதினாவிற்கு ஹிஜ்ரத்       :   நபித்துவ 12 ம்   ஆண்டில் 

தொழுகைக்கு  பாங்கு 
அறிமுகப்படுத்தப்பட்டது     : ஹிஜ்ரி 2 ல்


மது ஹராமாக்கப்பட்டது     :  ஹிஜ்ரி 6 ல்


மக்கா படையெடுப்பு           :  ஹிஜ்ரி 6 ல்


ஹஜ் கடமை                    :   ஹிஜ்ரி 9 ல் 

நபி{ஸல்}அவர்கள் 
        ஹஜ்  செய்தது         :  ஹிஜ்ரி 10 ல்


உலகைப் பிரிந்த நாள்       :  ஹிஜ்ரி 10,ரபிஉல் அவ்வல் பிறை 12,
                                          திங்ககிழமை [8-6-632 ] 


நாம்  அனைவரும்  அலலாஹ்வையும், நபி வழியையும்  பின் பற்றி    நடப்போமாக!  ஆமீன்.                                          

16 November 2010

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் !

அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்]
                                                                                               அன்பான சகோதர, சகோதரி அனைவருக்கும்,
  என் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.
                                                
                                                                 அன்புடன்
                                                                     ஆயிஷா

15 November 2010

குர்பானி -விளக்கம்

அஸ்ஸலாமு அழைக்கும்!

இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படை இறையச்சமாகும்.
நாம் செய்கின்ற நற்காரியங்களில் இறையச்சம் இருந்தால்தான்  அல்லாஹ்விடம் நற்கூலியை பெறமுடியும்.இந்த முக்கியமான அம்சத்தை நினைவூட்டும் விதமாக திகழ்வது குர்பானியாகும்.

நபி இப்ராஹீம்[அலை]அவர்களின் மகன் இஸ்மாயில்[அலை]அவர்களை 
பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்[அலை]அவர்களுக்கு
கட்டளையிட்டான்.அதை நிறை வேற்றிட தன் மகனை அழைத்து பலியிட 
துணிந்தபோது அல்லாஹ் அதை தடுத்து ஒரு ஆட்டைப் பலியிடுமாறு
கட்டளையிட்டான்.

இந்த தியாகத்தை நினைவுகூரும் மற்ற அனைவரும் பிராணியை குர்பானி 
கொடுக்க வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான்.இந்த விவரங்களை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது[37:101-108]
குர்பானியின் நோக்கம் இறையச்சம் மட்டுமேயாகும்.குர்பானியின் மாமிசமோ,அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை.உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது.[22:37]
உமது  இறைவனை தொழுது குர்பானி கொடுபீராக :[108:2]

உயர்ந்த நோக்கத்திற்காக கடமையாக்கப்பட்ட இந்த குர்பானியை நபி[ஸல்]
தமது வாழ்நாளில் பேணுதலுடன் கொடுத்து வந்துள்ளார்கள்.

எனவே உண்மையான நோக்கத்தை புரிந்துகொண்டு பெருமையோ,வேறு 
காரணங்களோ இல்லாமல் தியாக மனப்பான்மையுடன் அல்லாஹ்வுக்காக 
குர்பானி கொடுக்க வேண்டும்.நாம் மனத்தூமையுடன் செய்கின்ற குர்பானியும் நற்காரியங்களும் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும் மகத்தான நற்கூலியை தரும்.

எவர்களிடம் அன்றைய செலவு போக கடன் இல்லாமல் கூடுதலாக பணம் 
இருக்கிறதோ அவர்களெல்லாம் குர்பானி கொடுக்க வேண்டும்.
குர்பானி கொடுக்க எண்ணியவர்கள் துல்ஹஜ் பிறை ஒன்று முதல் குர்பானி 
கொடுக்கும்வரை நகம் முடியை வெட்டகூடாது.
நபி[ஸல்]அவர்கள் ஆடு,மாடு,ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுத்ததாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன.எனவே இம்மூன்று பிராணிகளும் குர்பானிக்கு தகுதியானதாகும்.

குர்பானி பிராணிகள் நல்லதிடகாத்திரமானதாகவும்,ஆரோக்கியமானதாகவும் 
இருக்கவேண்டும்.பொதுவாக எந்த குறையும் இருக்க கூடாது.
குர்பானி பிராணிகளை வாங்கும்போது நல்ல தரமான உயர் ரகமானதை 
வாங்குவது நன்மையை அதிகரித்திடும்.
நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும்,ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும்குர்பானிகொடுத்தோம்என்றுஜாபர்[ரலி]அறிவிக்கிறார்கள்[முஸ்லிம்]
நபி[ஸல்]அவர்கள் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'என்று கூறி கூர்மையான கத்தியால் அறுத்துள்ளார்கள்[புகாரி]
பெருமையை விரும்பாமல் ஏழைகளின் தேவைகளை கருதி எத்தனை பிராணிகளை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம்.வீண் விரயமாகாமல் இருக்கவேண்டும்.

பங்கிடுதலைப் பொறுத்தவரை யாருக்கு எத்தனை சதவிகிதம் என்றெல்லாம் 
கட்டளையிடப்படவில்லை.தர்மம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.குர்பானியின் பிராணியின் தோலையும் ஏழைகளுக்கு தர்மமாக வழங்கிடுமாறு நபி[ஸல்] கூறுகிறார்கள்[புகாரி,முஸ்லிம்]

குர்பானி கொடுத்ததும்  'யா அல்லாஹ்'   எனது இந்த குர்பானியை ஏற்றுக் 
கொள்வாயாக! என்று  துஆ செய்யலாம்.

அல்லாஹ்நம்அனைவருக்குமகுர்பானிகொடுக்கும்தகுதியையும், ஆவலையும்  தந்து அதை முறையுடன் நிறைவேற்றி அதன் பயனையும்.நன்மையையும் இறை திருப்தியையும் அடைந்து கொள்ளும் வாய்ப்பை தந்தருள்வானாக!ஆமீன்.                                                                                                                                                                                                 

12 November 2010

சலாம் கூறுவதின் சிறப்பு

சலாம் கூறுவதின் சிறப்பும்,அதன் பரப்புவதன் அவசியமும்,

இறை விசுவாசிகளே! உங்களின் வீடுகள் அல்லாத{மற்றவர்}வீடுகளில்,
நீங்கள் உள்ளே நுழைய அனுமதி பெற்று,அவர்களுக்கு நீங்கள் சலாம்
கூறும்வரை உள்ளே நுழையாதீர்கள்.{24:27}

நீங்கள் வீடுகளில் நுழைந்தால்,அல்லாஹ்விடமிருந்துள்ள வாழ்த்தாகவும்,
தூய்மையான அபிவிருத்தியாகவும் உள்ள சலாமை உங்களிடையே
கூறிக்கொள்ளுங்கள்[24:61]

ஒரு மனிதர் நபி[ஸல்]அவர்களிடம்"இஸ்லாத்தில் சிறந்தது எது?"என்று கேட்டார்.பசித்தவனுக்கு நீர் உணவளிப்பது,நீர் அறிந்தவர்,அறியாதவர் என அனைவருக்கும்சலாம் கூறுவது"என்று நபி[ஸல்] பதில் கூறினார்கள்.{புகாரி:12.முஸ்லிம்:39}

அல்லாஹ் ஆதம்[அலை]அவர்களைப் படைத்த போது[அவரிடம்]"நீர் சென்று அங்கேஉட்காந்திருக்கின்ற வானவர்களுக்கு சலாம் கூறுவீராக! உமக்கு அவர்கள் கூறும்வாழ்த்துக்களை நீர் கேட்பீர்ராக! நிச்சயமாக அது உமக்குரிய வாழ்த்துகளாகும்.உம வாரிசுகளுக்குரியே வாழ்த்துக்களாகும்."
அஸ்ஸலாமு அழைக்கும்{உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக}
என ஆதம்{அலை}வானவர்களிடம் கூறினார்.உடனே அவர்கள் 
அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மதுல்லாஹி[உங்கள் மீதும் அல்லாவின் சாந்தியும்,அவனின் கருணையும் உண்டாவதாக}என்று கூறினார்கள்.[புகாரி:3326.முஸ்லிம் :2841]

மனிதர்களே!சலாம் கூறுவதை பரப்புங்கள்.பசித்தவனுக்கு உணவளிங்கள்.
உறவினர்களை ஆதரிங்கள்.மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் 
தொழுங்கள்.சலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று 
நபி{ஸல்}அவர்கள் கூறினார்கள்.

அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொன்னால் பத்து  நன்மைகள்,
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்றால் இருபது நன்மைகள்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி,வபராகாதுகு என்று சொன்னால் என்று கூறினால் 30 நன்மைகள்.

முஹ்மீனுக்கு  முஹ்மீன் வலைப்பூவில் உங்கள் கருத்தை பகிரும் போது முதலில் சலாத்தை கூறுங்கள்.நாம் சலாத்தை கூறி அதன் பயனை 
பெறுவோமாக!
                                                

31 October 2010

குர்ஆன் ஓர் அற்புதம்

அஸ்ஸலாமு  அழைக்கும்!                                                             
                                                           
திருகுர்ஆன் பல காரணங்களால் அது ஒரு அற்புதம் என்று பலரால் போற்றப்படுகின்றது       

குர்ஆன் அருளப்பட்ட அரபிமொழி இன்றும் அதே பாணியில் பேசப்படுகின்றது. ஆனால் அதே வேளையில் பல வேத மொழிகள் இன்று உலகில் அடிச்சுவடு இல்லாமல் மறைந்து போய்விட்டன. மூலமொழியில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்ற ஒரே வேதம் திருமறைதான். இதுவல்லவா அற்புதம் என்று சிலர் வியக்கின்றனர். பெருவாரியான மக்களால் மனனம் செய்யப்பட்டு வருகின்ற ஒரு வேதம் திருகுர்ஆன் ஒன்றே என்பதை  அற்புதமாக பேசுகின்றனர் . எல்லா நாடுகளிலும், எல்லாமொழி பேசும் மக்கள் மத்தியிலும் அதன் மூல மொழியில் ஓதப்படுகின்ற ஒரே வேதம் திருகுர்ஆன.  

உலகில் இரவிலும், பகலிலும் ஒவ்வொரு நாளிலும் அதிகமான மக்களால், அதிகமாக ஓதப்படுகின்ற வேதம் அது.
கொஞ்சம் கூட ஆபாசம் இல்லாத, தூய்மையான கண்ணியமான வேதம் திருகுர்ஆன் ஒன்றே.
இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் யாவும் திருகுர்ஆனை உண்மைபடுத்துகின்றனவே என்று மூக்கின் மேல் விரல் வைக்கின்றனர்  
ஒரு அருமையான ஆரோக்கியமான அரசியல் சிந்தாந்தம் அல்லவா திருகுர்ஆன் என்று ஆச்சரியபப்படுகின்றனர்.

குர்ஆன் படித்த பின்னால்தான் இறைவன் மீது நம்பிக்கையும், ஒரு மரியாதையும் வருகின்றது என்கின்றனர் சிலர். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தக் கூடாது, மனிதனை மனிதன் வணங்கக்கூடாது என்று மனிதனின் சுயமரியாதையை காக்கும் அரணாக திருகுர்ஆன் என்கின்ற வேதம் ஒன்றுமட்டும் தான் போதிக்கின்றது என்று ஒப்புக் கொள்கின்றனர். தனி மனித உரிமைகளை திருகுர்ஆன் வலியுறுத்துவது போல் இதுவரை எந்த முற்போக்காளரும் வலியிறுத்தவில்லை.

திருகுர்ஆன் மனிதனின் சிந்தனையை தூண்டுவது போல், வேறு எந்த வேதமும் தூண்டவில்லை என்று நற்சான்றிதழ் அளிக்கின்றனர் சில தலைச்சிறந்த சிந்தனையாளர்கள். திருகுர்ஆன் ஒன்றுதான் தேசியம், பிராந்தியம், இனம், மொழி ஆகிய உணர்வுகளுக்குப்பால் ஒன்றுப்படுத்துகின்றது என்று மனம் குளிர்கின்றனர். மனித ஒருமைப்பாட்டை விரும்புபவர்கள். உண்மையான மனித நேயம் திருகுர்ஆனில் அல்லவா இருக்கின்றது என்று மயங்குகின்றனர் மனித நேயம் மிக்கவர்கள். திருகுர்ஆன் தோற்றுவித்த, தோற்றுவித்துக் கொண்டிருக்கின்ற புரட்சிகளைப் போல் வேறு எந்த  புரட்சியாளரும் தோற்றுவிக்கவில்லை என்கின்றனர் உண்மையான புரட்சியாளர்கள்.

இன்று அனைத்துலக வல்லரசுகளும் தடை செய்யத் துடிக்கும் ஒரு நூல் உள்ளது என்றால் அது திருகுர்ஆன் ஒன்றே.
இன்னும் சிலர் உலக அமைதிக்கு திருகுர்ஆன் சொல்லும் தீர்வுகள் தான் தீர்க்க தரிசனம் மிக்கவை என்கின்றனர்.குர்ஆன் வகுத்துத் தந்துள்ள சட்டதிட்டங்களை விட மேலான சட்டத்திட்டங்கள் இது வரை யாராலும் படைக்க முடியவில்லை என்று ஆச்சரியபப்டுகின்றனர் சில சட்ட வல்லுனர்கள். பெண்களின் கெளரவம், பெண்களின் கண்ணியம் திருகுர்ஆன் வழங்குவது போல் வேறு எந்த வேதமும் வழங்கவில்லை என்று ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் சில அகில உலக மகளிர் அமைப்புகள். இறைவனின் மகிமையையும், பெருமையையும், அவன் மதிப்பையும் திருகுர்ஆனைப் போல் எந்த வேதமும் எடுத்துரைக்கவில்லை என்று பரவசப்படுகின்றனர் சில கடவுள் நம்பிக்கையாளர்கள்.

மனிதனுக்குத் தேவையான எல்லாத் துறைகளுக்கும், திருகுர் ஆனைப்போல் வேறு எந்த வேதத்தாலும் வழிகாட்ட முடியவில்லை என்று முழங்குகின்றனர் சில அறிவு ஜீவிகள். உலகில் உள்ள அத்தனை மூடநம்பிக்கைகளையும் முளையிலேயே கிள்ளி எறிகின்ற வேதம் திருகுர்ஆன் ஒன்றே. இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்ற உயர்ந்த தத்துவத்தை, திருகுர்ஆனைத் தவிர வேறு எந்த வேதமும் தெளிவாக எடுத்துரைக்கவில்லை.

மனிதனால் கலப்படம் செய்ய முடியாத மாசுப்படுத்தப்படாத வேதம் திருகுர்ஆன் மட்டுமே என்று மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றன. திருகுர்ஆன் அரபு மொழியில் மிக தரமான இலக்கியத்தில் அமைந்துள்ள அதே வேளையில், பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் புரிந்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இது ஆச்சரியமான உண்மையாகும் என்று மொழிகின்றனர் சில மொழி வல்லுனர்கள்.

காணும் அற்புதம் திருகுர்ஆனில் மட்டும் தான் இறைவனே முழுக்க முழுக்க பேசுகின்றான்.
திருகுர்ஆன் மட்டும்தான் இறைவன் மட்டும் பேசும் இறைவேதமாக இருக்கின்றது. இதை யாராலும் எவராலும் மறுக்க முடியாது
திருகுர்ஆன் மக்களுடன் பேசுவது போல் மற்ற எந்த வேதமும் பேசவில்லை.
திருகுர்ஆனின் மூலம் மனிதர்களிடம் இறைவன் நேரிடையாகச் சொல்கின்றன.
திருகுர்ஆனில் மட்டும் இறைவன் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கின்றான்.
இறைவனுடன் பேசும் அந்த அற்புத அனுபவத்தை அடைய விரும்புபவர்கள் திருகுர்ஆன் படிக்கட்டும்.                         

25 September 2010

கடன்

அஸ்ஸலாமு  அழைக்கும்!             

     வியாபாரத்தில் கடன் என்பது தவிக்க முடியாத அம்சமாகி விட்டது. எல்லா வியாபரத்திலும் கடன் கொடுக்கல் வாங்கல் இருந்து கொண்டே இருக்கிறது. கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறையை அல்குர்ஆன் தெள்ளத் தெளிவாக சொல்கிறது. 

கடன் கொடுப்போரும் கடன் வாங்குவோரும் நடந்து கொண்டால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் விஷயங்கள் நேர்மாறானவை. கடன் வாங்கும்போது இனிக்க இனிக்கப்பேசி வாங்கிப் போவார்கள். கடனை திருப்பி கேட்டால் காரமாக பேசுவார்கள். உங்க பணத்தை எடுத்துக்கொண்டு எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன் தருகிறேன் என்பார்கள். எப்போது என்பதை மட்டும் சொல்ல மாட்டார்கள். வற்புறுத்திக் கேட்டால் ஒரு நாளை சொல்வார்கள். அந்நாளில் போனால் அலைகழிப்பார்கள்.  இவர்களின் எண்ணம் கடன் வாங்கிய பணத்தை அல்லது பொருளை மோசம் செய்து விட வேண்டும் என்பதே. இவர்கள் எதை செய்யப் போனாலும் விரித்தியாவதில்லை. திருப்பி கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு முடியாதபோது அவர்கள் அறியாத விதத்தில் அல்லாஹ் அக்கடனை அடைத்து விடுவான். இதைத்தான் இந்த ஹதீஸும் சொல்கிறது. 

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை பாழாக்கும் நோக்கத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை பாழாக்கி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

வசதி மிக்கவர்கள் வியாபாரிகளிடம் கடன் வாங்கி வைத்துக்கொண்டு இழுத்தடிப்பார்கள். இப்படி செய்வதை கெளரவமாக நினைப்பவர்களும் உண்டு. இது அநியாயமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.

வசதியுள்ளவர் (கடனை) இழுத்தடிப்பது அநியாயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: திர்மிதி

வசதி இருந்தும் கடனை அடைப்பதில் அக்கரை காட்டாதவர்களை வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை கடுமையான வார்த்தையைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு உரிமையுண்டு.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள். 

நபித்தோழர்கள், 'அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்" என்று கூறினார்கள். நூல்: புகாரி
                                               

21 September 2010

நியாயத் தீர்ப்பு நாளின் முதல் கேள்வி

அஸ்ஸலாமு அழைக்கும்!

மனிதன்  ஒரே  ஒரு  நோக்கத்திற்காகவே   படைக்கப்பட்டுள்ளான்.
"என்னை   வணங்குவதற்காகவே  ஜின்களையும்  மனிதரையும் 
படைத்திருக்கின்றோம் " என்று  அல்லாஹ்  கூறுகிறான் {51:56}
                                                                                                         மனிதர்கள்  இவ்வுலகில்  தன்னைப்படைத்த  இறைவனை   வணங்கி          வாழ வேண்டும். வணக்கத்தில்  மிகச்  சிறந்தது  தொழுகை. தீர்ப்பு 
நாளில்  மனிதன் தான்  இவ்வுலகில்  செய்த  ஒவ்வொரு  செயலுக்கும்
பதில்  அளித்தே  ஆக வேண்டும். இவ்வாழ்கையில்  அவனுக்களிப்பட்ட  
அருட்கொடைகளைப்  பற்றி  அவன் விசாரனை  செய்யப்படுவான்.

பின்னர்  உங்களுக்கு  இறைவன்  புரிந்த  அருளைப்பற்றியும்  அந்நாளில்
நீங்கள்  கேட்கப்படுவீர்கள்.என்று  குர்ஆன  கூறுகிறது  [102:8}. ஆனால் 
கடுமையான  அந்நாளில்  கேட்கப்படும்  முதல்  கேள்வி 
தொழுகையைப்  பற்றியதாகும்.

நியாயத்  தீர்ப்பு   நாளில்  அவனது  செயல்கள்  சாட்சியாக  வைக்கப்படும்போது ,முதல்  நிலையாகிய  தொழுகை  சரியாக  அமைந்திருந்தால்  மறுமையின்  நிலையும்  சரியாக  அமைந்து  விடும் .தொழுகை  சரியாக  அமையாவிட்டால் மறுமையில்  அளவற்ற  கஷ்டங்களை  எதிர்நோக்க  நேரிடும். 

ஒரேயொரு  தொழுகையை  கவனக்  குறைவாக   விட்டாலும் 
அது  ஈடு  செய்ய  முடியாத  ஒரு  பெரும்  பாவமாகும்.

கடுமையான  போர்க்களங்களில்  கூட  ஒரு  முஸ்லீம்  தொழுகையை 
தவறவிட  அனுமதி  இல்லை. மாதவிடாய்  சமயத்தில்  மட்டும் 
{பெண்களுக்கு}  இதிலிருந்து  சலுகை  அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் எவ்வளவு  கடும்  நோய்னால்  பாதிக்கப்பட்டிந்தாலும் ,
அவர்களது  உணர்வுகள்  இருக்கும்வரை  தொழுதே  ஆக வேண்டும்.

நாம்  எல்லோரும்  அல்லாஹ்வை  ஈமான்  கொண்டு,
ஐந்து  நேர  தொழுகையை  கடைபிடிப்போமாக!         

17 September 2010

அல்லாஹ்வின் வல்லமை

                                                                                                அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்: 

அல்லாஹ் கூறுகிறான்: எனது அடியார்களே! நான் நிச்சயமாக அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்களைத் தவிர. ஆகவே நேர்வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியர்வர்களைத் தவிர (மற்ற) அனைவரும் பசித்தர்வர்களே. ஆகவே அவர்களுக்கு உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உணவளிக்கிறேன். 

 என் அடியார்களே! உங்களில் நான் உடை அணிவித்தவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் உடையற்றவர்களே. என்னிடம் உடையளிக்குமாறு கேளுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவ காரியங்களைப் புரிகிறீர்கள்; நான் சகல பாவங்களையும் மன்னிக்கிறேன். ஆகவே என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன்.

என் அடியார்களே! எனக்கு நீங்கள் தீங்கிழைக்கவோ, நன்மை புரியவோ முடியாது. என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், உங்களுக்கு பின்னால் தோன்றக் கூடியவர்களும், மனிதர்களூம், ஜின்களும்,  (அனைவரும்) உள்ளத் தூய்மைப் பெற்ற முத்தக்கீன்களாகி (இறையச்சமுடையவர்களாகி) விட்டாலும் அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. என் அடியார்களே! உங்களுக்கு முன்னால் தோன்றியவர்களும், இனி தோன்றக் கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், ஜின்களும், (ஒன்று சேர்ந்து) மிகக் கெட்ட மனம் படைத்தவர்களாகி விட்டாலும் அதுவும் என் அதிகாரத்தை சிறிதளவும் குறைத்து விடாது!                 

என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், மனிதர்களும், ஜின்களும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்றுகொண்டு என்னிடம் கேட்கட்டும் . அவர்கள் கேட்கின்ற அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அவ்வாறு கொடுப்பதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதி கடல் நீர் ஒட்டிக் கொள்வதால் எவ்வளவு கடல் நீர் குறையுமோ அந்த அளவுக்குக்கூட என்னிடமுள்ள அருட்கொடைகள் குறைந்து விடாது.

என் அடியார்களே! இதோ உங்கள் செயல்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். பிறகு (மறுமையில்) இதன் கூலியை உங்களுக்கு நான் அளிப்பேன். நீங்கள் நற்கூலி பெற்றுக்கொண்டால், அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி காட்டுங்கள்; நல்லது அல்லாததை (தண்டனை) நீங்கள் பெற்றுக் கொண்டால் அதற்கான காரணம் நீங்கள்தாம்.            

12 September 2010

இறைவனுக்கு இணை வைத்தல்

                                      பெரும் பாவம்                                  அஸ்ஸலாமு  அழைக்கும்

நாம்  வாழும் உலகில் எல்லா படைப்புகளையும் வல்ல இறைவன் படைத்து ஒழுங்கு படுத்தி அவைகளை ஒரு வரையறைக்குள் வாழ வைத்து    கொண்டிருக்கிறான்.இதில் சிறந்த படைப்பு மனித இனம் மட்டுமே.             இந்த மனிதனை படைத்தது;அவனுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும்,
ஆற்றல்களையும் வழங்கி சிறப்பித்திருக்கிறான்.

மனிதன் தன்னை மட்டுமே வணங்கி வர வேண்டும். 
தனக்கு நிகராக எந்த படைப்பையும் கொண்டு,
தனக்கு இணை கர்ப்பிக்கக்கூடாது 
என்பது தான் இறைவனின் கண்டிப்பான 
கட்டளை !                            
     
"திக்ர்" எனும் தியானம் 'துஆ' எனும் பிரார்த்தனை 'ஸஜ்தா' என்ற 
சிரம்பணிதல்,மற்றநேர்ச்சை, குர்பானி,வணக்க வழிபாடுகள் யாவும் எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே.
                                            
இந்த வணக்கத்தை இறைவனின் படைப்புகளுக்கு செலுத்தி 
கவுரவப்படுத்திடும் போது  இவைகளை எல்லாம் படைத்த இறைவன் மிகவும் ரோஷம் கொள்கிறான்.கோபப்படுகிறான்.தன்னை மனிதன் மதிப்பதில்லை.
தான் படைத்த படைப்புகளை தன்னைவிட மதித்து வழிபடுகிறானே என்று 
ஆக்ரோஷம் கொள்கிறான்.அகிலங்களின் புகழுக்கெல்லாம்  இறைவன் மட்டுமே சொந்தக்காரன்.அத்தகைய புகழை பிறருக்கு தாரை வார்த்து வருவதை கண்டிக்கிறான். அவர்களை தண்டிக்கிறான்.
                                                                                                              நிச்சயமாக இறைவன் தனக்குஇணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். மேலும் இது அல்லாததை {குற்றங்களை}த்தான், நாடியவர்களுக்கு  மன்னிப்பான்,மேலும் யார் இறைவனுக்கு இனைவைப்பாரோ,அவர் நிச்சயமாக வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டார் {அல்குர்ஆன 4:116}
                                                                                                               சமாதி {கப்ர்}வணக்க வழிபாட்டினை  ஆதரித்து அடக்கஸ்            தலங்களுக்கு{தர்காக்களுக்கு] சென்று  வழிபட்டு  வருபவர்களே!
கப்ர் எனும் சமாதிகளை வணங்க இஸ்லாம் தடுத்துள்ளேதே."உங்களின்  செருப்பு வார் அறுந்தாலும் இறைவனிடமே  கேளுங்கள்!"என்று இறைத்தூதர் 
முஹம்மத்{ஸல்}அவர்கள் கூறியிருக்க {கப்ர்]சமாதிகளில்  சென்று  மண்டியிட்டு  மன்றாடுவது எந்த வகையில் எந்த வகையில் நியாயம்?
                                                                                                     இனியேனும் இறைவனுக்கு இணை வைக்கும் மாபெரும் இப்பாவச் செயலை விட்டு தவிர்த்திடுவீர் !    
                                                                                                                          சமாதி[கப்ர்]களை தரிசனம்{ஜியாரத்} செய்பவர்கள் மீது இறைவனின் சாபம் இறங்குகிறது.இறைத்தூதர்{ஸல்}அவர்கள்கூறுகிறார்கள்.அடக்கஸ்தலங்களை வணக்கஸ்த்தளங்களாக ஆக்கி விடாதீர்கள்.
                                                                                                              இறைவா என் சமாதி{கப்ர்}யை வணங்கும் இடமாக ஆக்கி விடாதே என்று இறுதி இறைதூதர் இறைவனிடம் இறைஞ்சியதை  ஒரு வினாடி எண்ணிப்பார்க்க வேண்டாமா?
                                                                                                      இறைவனுக்கு இணைவைத்திடும் இக்கொடிய பாவத்தைவிட்டு 
விலகி;ஐந்து நேரம் தொழுகையை முறையாக கடைப்பிடித்து;
நம்மைப்படைத்த இறைவனிடமே கையேந்தி பிரார்த்திப்போமாக!!!
                                                                                                          இறைவன் கூறுகிறான் :நீங்கள் பிரார்த்திப்பீராக ! உன்னையே 
நாங்கள் வணங்குகிறோம் .இன்னும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.{அல்பாத்திஹா அத்தியாயம் 1-வசனம்:


 நாம்  அல்லாஹுவின்  மீது நப்பிக்கை கொண்டு, அவனுக்கு 
இணை வைக்காமல்  நடப்போமாக!

09 September 2010

ஈத்  முபாரக்!
                       அஸ்ஸலாமு  அழைக்கும்!                இஸ்லாமிய  சகோதர,சகோதரிகள் அனைவருக்கும்  என் இனிய  பெருநாள்  வாழ்த்துக்கள்.                                                                                                                                        
                               

                                  

31 August 2010

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்


அஸ்ஸலாமு  அழைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபரகாத்துஹு   

இந்த ரமளான் மாதத்தில் நோன்பை தவிர்த்து இன்னொரு அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலதுல் கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் தெரிவிக்கிறான்.

                      
   நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குரான் 97:1-5)  
                                                                                           

 அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை ஏதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 


ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் 
ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி அது உங்களுக்கு நலமாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஒன்று,இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  



அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் {ஆயிஷா(ரலி)}அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன்.இவ்வாறு கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள்.

    
அல்லாஹம்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.


                                                                                    
விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஒரு இரவுக்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ் சூரத்துல் கத்ரில் கூறுகின்றான். 




அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கின்றது. இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். "83 வருடம் நாம் வாழ்வோமா?" என்பதே கேள்விக்குரியானது! ஆனால் ஒருநாள் அமல் செய்வதினால் அந்த நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். 



இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட இந்தப்பத்து நாட்களில் நபியவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுவடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் எவ்வளவு அதிகமாக அமல்களில் ஈடுபட வேண்டும். சிந்தித்துப்பாருங்கள்! 



ஆகவே அச்சிறப்பான இரவில் தொழுகை, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களை அதிகமதிகம் செய்துவிட்டு மற்ற நாட்களை விட்டுவிடக்கூடியவர்கள் நம்மில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். இது நல்ல முடிவல்ல.

                                                             
நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவைப் பற்றி சொல்வதற்காக வெளியில் வந்தார்கள். அல்லாஹ் அதை மறக்கடித்து விட்டான். ஆனால் அந்த இரவை நாம் தெரிந்து கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் சில அடையாளங்களைக் கூறினார்கள்.

 
"ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை நாட்கள்" இப்படி கூறுவதினால் "ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களில் அமல்கள் செய்யப் தேவையில்லை" என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. மற்ற 20நாட்களை விட இந்த நாட்களில் அதிக அமல்களை செய்யவேண்டும்.



இந்த இரவின் புனிதத்தை அறியாத பலர், இதை ஒரு அலட்சியமாக கருதி இந்த இரவை வீண் காரியம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.இப்படிப் பட்ட ஒரு வாய்ப்பை நாம் தழுவ விடக் கூடாது.வெறும் 10 இரவுகள் கண் விழிப்பதற்கு 1000 மாதங்களை விட அதிகமான நன்மைகளை பெற்றுத் தரும் இந்த தொழுகையை நாமும் தொழுது நமது குடும்பத்தினரையும்,நண்பர்களையும் தொழுமாறு வலியுறுத்த வேண்டும்.


நாம்  அனைவரும்  ஒற்றைப்படை  நாளில் அதிகமாக தொழுது, திகிர் செய்து, குர்ஆன ஓதி  லைலத்துல் கத்ர் சிறப்பை தேடிக்கொள்வோமாக.

              

26 August 2010

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

அஸ்ஸலாமு அழைக்கும்.
1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி,
5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
6) ""எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..