அஸ்ஸலாமு அழைக்கும்!
வியாபாரத்தில் கடன் என்பது தவிக்க முடியாத அம்சமாகி விட்டது. எல்லா வியாபரத்திலும் கடன் கொடுக்கல் வாங்கல் இருந்து கொண்டே இருக்கிறது. கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறையை அல்குர்ஆன் தெள்ளத் தெளிவாக சொல்கிறது.
கடன் கொடுப்போரும் கடன் வாங்குவோரும் நடந்து கொண்டால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் விஷயங்கள் நேர்மாறானவை. கடன் வாங்கும்போது இனிக்க இனிக்கப்பேசி வாங்கிப் போவார்கள். கடனை திருப்பி கேட்டால் காரமாக பேசுவார்கள். உங்க பணத்தை எடுத்துக்கொண்டு எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன் தருகிறேன் என்பார்கள். எப்போது என்பதை மட்டும் சொல்ல மாட்டார்கள். வற்புறுத்திக் கேட்டால் ஒரு நாளை சொல்வார்கள். அந்நாளில் போனால் அலைகழிப்பார்கள். இவர்களின் எண்ணம் கடன் வாங்கிய பணத்தை அல்லது பொருளை மோசம் செய்து விட வேண்டும் என்பதே. இவர்கள் எதை செய்யப் போனாலும் விரித்தியாவதில்லை. திருப்பி கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு முடியாதபோது அவர்கள் அறியாத விதத்தில் அல்லாஹ் அக்கடனை அடைத்து விடுவான். இதைத்தான் இந்த ஹதீஸும் சொல்கிறது.
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை பாழாக்கும் நோக்கத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை பாழாக்கி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி
வசதி மிக்கவர்கள் வியாபாரிகளிடம் கடன் வாங்கி வைத்துக்கொண்டு இழுத்தடிப்பார்கள். இப்படி செய்வதை கெளரவமாக நினைப்பவர்களும் உண்டு. இது அநியாயமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.
வசதியுள்ளவர் (கடனை) இழுத்தடிப்பது அநியாயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: திர்மிதி
வசதி இருந்தும் கடனை அடைப்பதில் அக்கரை காட்டாதவர்களை வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை கடுமையான வார்த்தையைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு உரிமையுண்டு.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள், 'அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்" என்று கூறினார்கள். நூல்: புகாரி