25 September 2010

கடன்

அஸ்ஸலாமு  அழைக்கும்!             

     வியாபாரத்தில் கடன் என்பது தவிக்க முடியாத அம்சமாகி விட்டது. எல்லா வியாபரத்திலும் கடன் கொடுக்கல் வாங்கல் இருந்து கொண்டே இருக்கிறது. கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறையை அல்குர்ஆன் தெள்ளத் தெளிவாக சொல்கிறது. 

கடன் கொடுப்போரும் கடன் வாங்குவோரும் நடந்து கொண்டால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் விஷயங்கள் நேர்மாறானவை. கடன் வாங்கும்போது இனிக்க இனிக்கப்பேசி வாங்கிப் போவார்கள். கடனை திருப்பி கேட்டால் காரமாக பேசுவார்கள். உங்க பணத்தை எடுத்துக்கொண்டு எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன் தருகிறேன் என்பார்கள். எப்போது என்பதை மட்டும் சொல்ல மாட்டார்கள். வற்புறுத்திக் கேட்டால் ஒரு நாளை சொல்வார்கள். அந்நாளில் போனால் அலைகழிப்பார்கள்.  இவர்களின் எண்ணம் கடன் வாங்கிய பணத்தை அல்லது பொருளை மோசம் செய்து விட வேண்டும் என்பதே. இவர்கள் எதை செய்யப் போனாலும் விரித்தியாவதில்லை. திருப்பி கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு முடியாதபோது அவர்கள் அறியாத விதத்தில் அல்லாஹ் அக்கடனை அடைத்து விடுவான். இதைத்தான் இந்த ஹதீஸும் சொல்கிறது. 

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை பாழாக்கும் நோக்கத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை பாழாக்கி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

வசதி மிக்கவர்கள் வியாபாரிகளிடம் கடன் வாங்கி வைத்துக்கொண்டு இழுத்தடிப்பார்கள். இப்படி செய்வதை கெளரவமாக நினைப்பவர்களும் உண்டு. இது அநியாயமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.

வசதியுள்ளவர் (கடனை) இழுத்தடிப்பது அநியாயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: திர்மிதி

வசதி இருந்தும் கடனை அடைப்பதில் அக்கரை காட்டாதவர்களை வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை கடுமையான வார்த்தையைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு உரிமையுண்டு.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள். 

நபித்தோழர்கள், 'அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்" என்று கூறினார்கள். நூல்: புகாரி
                                               

சிறந்த முறையில் கடனை அடைப்பதன் மூலம் நாமும் சிறந்த மனிதனாகிறோம்.  வசதி குறைந்தவர்களுக்கு கடன் கொடுப்பவர்களுக்கு கொஞ்சம் அதிகப் படியாகவே கால அவகாசம் தரலாம்.  அந்த அவகாச காலத்தில் கடனை செலுத்த முடியாத  நிலையேற்பட்டால் வசதி குறைந்தவரின் கடனை தள்ளுபடி செய்து விடுவது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலியை பெற்றுத்தரும்.  எந்த நிழலும் இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலில் இடம் தருவான்.

யாரேனும் சிரமப்படுபவருக்கு அவகாசம் வழங்கினால் அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்தால் எந்த நிழலும் இல்லாத இறுதி நாளில் அர்ஷின் நிழலின் கீழ் அவருக்கு அல்லாஹ் நிழல் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதி

ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

ஒருவர் முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. . கடன் வாங்கிய பிறகு அதனை நிறவேற்ற முடியாமல் கடன் கொடுத்தவரிடம் கொடுத்த வாக்கை மீறுவதும் பொய்யும் கூறுவது அவனில் ஏற்படுகிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கடனை விட்டும் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள்.
                                                                                   
                                                             
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  

"இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். 'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்" என்று நபி(ஸல்)  அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: புகாரி 

கடனால்  ஏற்படும்  இன்னல்களை  விட்டும்  நாம்  அல்லாஹ்விடம் 
பாதுகாப்பு  தேடுவோமாக!





                                       


2 comments:

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா! நானும் இந்த 'கடன்' பற்றி விரிவாக எழுத இருக்கிறேன், இன்ஷா அல்லாஹ்! உங்கள் பதிவும் அருமையாக உள்ளது. தொடருங்கள்!

ஆயிஷா அபுல். said...

வ அழைக்கும் சலாம் அஸ்மா!
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
நன்றி.உங்கள் பதிவை தொடர
வாழ்த்துக்கள்.

Post a Comment